முன்னோக்கு

ஜேர்மனி ரஷ்ய தூதரை ஆஜராகுமாறு விடுத்த கட்டளையும், தீவிரமடைந்துவரும் மாஸ்கோவுடனான மோதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த திங்கள்கிழமையன்று, பேர்லினில் உள்ள ரஷ்ய தூதரை ஜேர்மன் அரசாங்கம் நேரில் ஆஜராகுமாறு கட்டளையிட்டதன் மூலம் மாஸ்கோ உடனான இராஜதந்திர மோதலை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளது. “உக்ரேனுக்கான எங்களது ஆதரவை பலவீனப்படுத்தும்” நோக்கில், “ஜேர்மனியில் உள்ள இலக்குகளுக்கு எதிராக ரஷ்யா நேரடி அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக” குற்றம் சாட்டி, வெளியுறவு அமைச்சகம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியது. இதற்கு பேர்லினின் பதில் “தெளிவானது” என்று அறிவித்த அமைச்சகம், ஜேர்மனி எந்த “அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது” என்றும் குறிப்பிட்டது.

அறிக்கைகளின்படி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் ஜேர்மனியைத் தளமாகக் கொண்ட ஆயுத நிறுவனங்களின் முகவரிகளை வெளியிட்டது. உக்ரேனுக்குப் புதிய ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கப்போவதாக அல்லது ஜேர்மன் ஆயுத உற்பத்தியாளர்களுடன் இணைந்து அவற்றை அங்கேயே உற்பத்தி செய்யப்போவதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்ததற்கு எதிர்வினையாக ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்மனியால் தூண்டப்பட்டு உக்ரேனால் தொடுக்கப்படும் தாக்குதல்கள் ரஷ்ய நிலப்பரப்பின் மீது தொடர்ந்தால், ஜேர்மனியில் உள்ள இராணுவ நிலைகளை மாஸ்கோ தாக்கக்கூடும் என்ற ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு, ஜேர்மன் அரசாங்கம் மோதலை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் பதிலளிக்கிறது. ரஷ்ய தூதரை நேரில் ஆஜராகுமாறு கட்டளையிட்ட நடவடிக்கையானது, ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இருநாட்டு உறவுகளை மேலும் சிதைப்பதையும், ஒரு நேரடி இராணுவ மோதலுக்குத் தயாராவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தூதரை நேரில் ஆஜராகுமாறு கட்டளையிடுவது என்பது இராஜதந்திரத்தில் மிகவும் மோதல் போக்கைக் கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடத்திவரும் பினாமி யுத்தத்தில் ஜேர்மனி ஏற்கனவே ஒரு முக்கியப் பங்கை வகித்து வரும் நிலையில், இது கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அரசியல் சமிக்ஞையாகும். இது “பேச்சுவார்த்தைக்கான” அடையாளம் அல்ல, மாறாகப் பேச்சுவார்த்தைகளை முறையாக முறித்துக் கொள்வதற்கான அடையாளமாகும். இந்தக் கட்டளை, இராஜதந்திர உறவுகளை முழுமையாகத் துண்டிப்பது வரையிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளின் ஒரு முன்னோடி நடவடிக்கையாகும்.

ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேபுல், லக்சம்பேர்க் நகரில் ஊடகத்தினருடன் பேசுகிறார், ஏப்ரல் 21, 2026. [AP Photo/Virginia Mayo]

இதைத் தெளிவாகக் கூற வேண்டும்: நாஜி ஆட்சியால் சோவியத் யூனியன் ஆக்கிரமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மனி மீண்டும் நடைமுறையில் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த நிகழ்வானது, அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள் கூறுவது போல, ஒரு “ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு” எதிராக “சுதந்திரத்தையும்” “ஜனநாயகத்தையும்” பாதுகாப்பதோடு எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. இது, ஜேர்மன் ஆளும் வர்க்கத்தால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு கொள்கையின் விளைவாகும். அந்த வர்க்கம் தனது ஏகாதிபத்திய நலன்களை மென்மேலும் தீவிரமான ஆக்ரோஷத்துடன் நிலைநிறுத்தி வருகிறது.

2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பேர்லின் அமெரிக்காவுடன் நெருங்கிய கூட்டணி சேர்ந்து கியேவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்து, பாசிச சக்திகளின் உதவியுடன் ஒரு மேற்கத்திய ஆதரவு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. இந்த ஆட்சி ரஷ்யாவுடனான மோதலைத் தீவிரப்படுத்தியதுடன், நேட்டோவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, பிப்ரவரி 2022-இல் ரஷ்யப் படையெடுப்பைத் திறம்படத் தூண்டியது. அதிலிருந்து, நேட்டோ சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர்ந்து தூண்டி வருகின்றன. அத்தோடு, அவர்கள் இராஜதந்திர ரீதியிலான தீர்வைத் தேடவில்லை என்பதையும், மாறாக மாஸ்கோவின் இராணுவச் சரணடைதலையே நாடுகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேர்லினுக்கு மேற்கொண்ட பயணம், இந்த மோதல் போக்கின் மற்றொரு தீர்க்கமான படியாக அமைந்தது. கையெழுத்திடப்பட்ட “மூலோபாய கூட்டாண்மை”, இராணுவ ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு முறைப்படுத்துகிறது. இதில் உக்ரேன், ரஷ்ய நிலப்பரப்பிற்குள் ஆழமாகச் சென்று நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்துவதற்கு வழிவகை செய்யும் குறிப்பிட்ட ஆயுதத் திட்டங்களும் அடங்கும். அதே நேரத்தில், ஜேர்மன் நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் உக்ரேனிய பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள், குறிப்பாக அதன் விரிவான மூலப்பொருள் வளங்கள் மீது தங்களது செல்வாக்கை உறுதிப்படுத்தி வருகின்றன.

இவ்வாறு உக்ரேன், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஒரு புவிசார் மூலோபாயத் தளமாக செயல்பட்டு வருகிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் இருப்பதைப் போலவே, இதுவும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து யூரேசிய நிலப்பரப்பு வரை ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் ஏகாதிபத்திய நலன்களை நிலைநாட்டுவதற்கான ஒரு புறக்காவல் நிலையமாகச் செயல்படுகிறது. இந்த நோக்குநிலையானது, 20-ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வரலாற்று ரீதியான விரிவாக்க இலட்சியங்களை நினைவூட்டும் ஒரு பரந்த “கிழக்கு நோக்கிய உந்துதலின்” பகுதியாகும். இந்த இலட்சியங்கள்தான் மனித வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய குற்றங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன.

இந்தக் கொள்கை இப்போது எவ்வளவு வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது என்பதற்கு, ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பான்சர்கிரெனேடியர் பிரிகேட் 41-ஐ ஒப்படைக்கும் விழாவிலும், லிதுவேனியாவில் உள்ள நேட்டோ பணியிலிருந்து திரும்பியவர்களுக்கான அணிவகுப்பு விழாவிலும், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் ஆற்றிய உரையில் வெளிப்பட்டது. வடேபுல் ரஷ்யாவை “உக்ரேன் மக்கள் மீது பயங்கரவாதத்தை திணிக்கும்” ஒரு “அச்சுறுத்தல்” என்று கண்டித்தார். இதிலிருந்து, ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பாவின் இராணுவப் பலத்தை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், தயார்நிலையை அதிகரிப்பதையும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் நிரந்தரமாகப் படைகளை வலுப்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார். ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு ஜேர்மனி “பொறுப்பு” ஏற்கிறது என்று அவர் கூறினார் — இந்தச் சூழலில் இத்தகைய வார்த்தைப் பிரயோகம், ரஷ்யாவிற்கு எதிரான ஒரு பெரிய ஐரோப்பியப் போருக்கான தயாரிப்பைத் தவிர வேறொன்றுமில்லை.

லிதுவேனியாவில் ஜேர்மன் படைகளின் நிலைநிறுத்தமும் விரிவாக்கமும் குறிப்பாகப் பல உண்மைகளை உணர்த்துகின்றன. தற்போது அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள 41-வது பான்சர்கிரெனடியர் படைப்பிரிவும், மற்றொரு போர் படைப்பிரிவும் —மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட கனரக ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள்— ஒரு தற்காப்பு நடவடிக்கை அல்ல, மாறாக அவை ரஷ்யாவுடன் நேரடி மோதலை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆக்கிரமிப்பு இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

அதே நேரத்தில், ஐரோப்பிய வல்லரசுகள் தங்களின் அணுஆயுத திறன்களையும் திட்டமிடலையும் மேம்படுத்தி வருகின்றன. வலுவான ஐரோப்பிய “அணு ஆயுத பதிலடி கொடுக்கும் ஆற்றலை” வளர்க்கும் நடவடிக்கைக்கான பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முன்முயற்சிகள் வெறும் கலந்துரையாடல் அளவில் மட்டும் இல்லை. அவை தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த திங்கள்கிழமையன்று, மக்ரோனும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கும் கிதான்ஸ்க்கில் (Gdańsk) நடந்த சந்திப்பில், கூட்டுப் பயிற்சிகள் மற்றும் அணுஆயுதப் பயன்பாட்டு தந்திரோபாயங்களில் நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஆதரவாகப் பேசினர்.

“அணுஆயுதத் துறையிலோ அல்லது கூட்டுப் பயிற்சிகளிலோ எங்களது ஒத்துழைப்பு என்பது... எல்லைகளற்ற ஒரு ஒத்துழைப்பாகும்,” என்று போலந்து பிரதமர் டஸ்க் கூறினார். குறிப்பாக அணுஆயுத பதிலடி கொடுக்கும் ஆற்றல் துறையில், “உறுதியான முன்னேற்றத்தை” அடைவதற்கான நடவடிக்கைகள் வரும் மாதங்களில் எடுக்கப்படும் என்று மக்ரோன் அறிவித்தார். “போலந்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய பிரெஞ்சு போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நகர்வுகளுக்கு பேர்லினில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்தகைய ஐரோப்பிய அணுஆயுத முன்னெடுப்புகளில் பங்கேற்க ஜேர்மனி தயாராக இருப்பதாக சான்சிலர் பிரெடெரிக் மெர்ஸ் சமிக்ஞை செய்துள்ளார். அதே வேளையில், ஜேர்மனி தனக்கெனச் சொந்தமாக அணுஆயுதத் திறன்களைப் பெற வேண்டும் என்று அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன. இது ஒரு அணுஆயுத மோதலின் ஆபத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கும் ஒரு முக்கியமான எல்லையைத் தாண்டுகிறது.

ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் இந்த அடிப்படைப் போக்கை மாற்றிவிடவில்லை. மாறாக, அவை இராணுவ ரீதியாக ஆயுதங்களைப் பெருக்குவதற்கும், செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் வளங்களுக்கான போராட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. உக்ரேன் போரும் ரஷ்யாவிற்கு எதிரான போர் விரிவாக்கமும் உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான மையக் களங்களாக உள்ளன.

இந்தப் பின்னணியில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடர்பாக ஜேர்மன் அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடும் ஒரு எச்சரிக்கையாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த முழுமையான அழித்தொழிப்பு குறித்த அச்சுறுத்தல்களை, முறையான பேச்சுவார்த்தைக்கான தந்திரங்கள் என்று சான்சிலர் மெர்ஸ் ஆதரித்துப் பேசியபோது, ஆளும் வர்க்கமானது மிகக் கொடூரமான இராணுவ வன்முறைகளை ஆதரிக்கவும், அவற்றை மீண்டும் தாங்களே பயன்படுத்தவும் தயாராக உள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். பேர்லினிடமிருந்து வரும் விமர்சனங்கள் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளுக்கு எதிரானவை அல்ல. மாறாக, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர், ரஷ்யாவிற்கு எதிரான தங்களது மூலோபாயத் தாக்குதலைப் பலவீனப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினால் மட்டுமே எழுகின்றன.

இந்தக் கொள்கையின் விளைவுகள் மிக மோசமானவை. ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நேரடிப் போர் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் இராணுவமயமாக்குவதைக் கோருகிறது. ஏற்கனவே, ஜனநாயக உரிமைகள் அரிக்கப்பட்டு வருகின்றன, சமூக நலச் செலவுகள் கடுமையாகக் வெட்டிக் குறைக்கப்படுகின்றன, மேலும் பொருளாதாரம் போர் உற்பத்தியை நோக்கியே திருப்பப்படுகிறது. கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் நோக்கம், இலட்சக்கணக்கான இளைஞர்களைப் போரில் பலியாக்கும் பீரங்கித் தீவனங்களாக ஆக்குவதே ஆகும். அணுஆயுதங்களை கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நேரடிப் போர் என்பது தவிர்க்க முடியாமல் அணுஆயுத மோதலின் அபாயத்தை அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாகும்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கமானது, தனது ஏகாதிபத்திய நலன்களை நிலைநாட்ட உலகை மீண்டும் ஒருமுறை பேரழிவில் தள்ளத் தயாராக உள்ளது. ஒரு சர்வதேச சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதை முறியடிக்க முடியும். தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமாக ஒன்றிணைந்து, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக அணிதிரள வேண்டும். மேலும், இலாப நோக்கங்களுக்குப் பதிலாக சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்திற்காகப் போராட வேண்டும்.

Loading